Wednesday, September 23, 2009

தாய்ப்பாசம்

மோசமான நாட்கள்
உக்கிரமடைந்த போர்
வேட்டையில் கலைக்கப்படும்
மிருகத்தைப்போல ஓடுகின்றோம்

தொடர் குண்டுத்தாக்குதல்கள்
இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள்
மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று
காப்பாற்றுவார் யாருமில்லை!

கோழியின் இறகுக்குள் பதுங்கும்
குஞ்சுகள் போல
பிள்ளைகள்;
உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில்
பதுங்குகுழிகள்!
அவையே சவக்குழியாகும் அவலம்!

இறுதியில்
ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை!
நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர்
நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது
நடக்கக்கூட ஜீவனில்லை!

பெற்றெடுத்து தோளில் சுமந்தவள்
கூலிவேலை செய்து
என்னை வளர்த்தெடுத்தவள்!
மொட்டுவிடும் பருவத்தில் பிள்ளைகள்!
திரிசங்கு நிலையில் நான்,
யாருக்கும் வரக்கூடாத
துயரத்தின் உச்சம்!
என்ன செய்ய ஆண்டவா!

பேரப்பிள்ளைகளைக் கொண்டு போ
வாழவேண்டியதுகள்! என்றாள்
கலக்கமின்றி!
பார்வையில் அவளது தெளிவு
பேரப்பிள்ளைகளை காப்பாற்றும் ஆதங்கம்
என் கன்னத்தில் இருந்த
கண்ணீரை துடைத்து
கையை பிடித்து! நான் வருவன்! நீ போ என்றாள்!
விடைபெறும் இறுதித்தருணம்
அவள் கண்களில் தீர்க்கமான பார்வை!
அன்னையாக மட்டுமல்ல
தியாகத்தின் மறுவடிவமாகவும்
என் தாய்.....!
நடைபிணமாக வந்தேன்! திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு
தேடுகின்றேன்
அம்மாவை
இன்னும்.................!

No comments:

Post a Comment